Monday, January 9, 2012

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

ரசனைகளை இழந்து விடாதீர்கள்! 
                                                                 


வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில்
மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம்.

வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கில மகாகவிஞன் வானவில்லைக் குறித்து எழுதிய ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. பலரும் மேற்கோள் காட்டும் குழந்தையே மனிதனின் தந்தை (The Child is father of the Man) என்ற பிரபல பொன்மொழி இந்தக் கவிதையில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்தக் கவிதையை அனேகம் பேர் அறிந்திருக்கலாம்.

The Rainbow


My heart leaps up when I behold  
A rainbow in the sky:  
So was it when my life began;  
So is it now I am a man;  
So be it when I shall grow old,
Or let me die!  
The Child is father of the Man;  
I could wish my days to be  
Bound each to each by natural piety.

அந்தக் கவிஞன் சொல்கிறான். “வானவில்லை வானில் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் சிலிர்க்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கை ஆரம்பித்த குழந்தைப் பருவத்தில் இருந்தது. வளர்ந்த பிறகு இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இதே போல் என் வயோதிக காலத்திலும் இருக்கட்டும். அப்படி இல்லா விட்டால் நான் இறந்தே போவேனாக! குழந்தையே மனிதனின் தந்தை! இயற்கையின் அழகை ரசிக்கும் பக்தனாக, என் வாழ்நாள் அனைத்திலும் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.”

வளர்ச்சி என்பது மரத்துப் போவதல்ல. நம் நுண்ணிய உணர்வுகளையும் ரசனைகளையும் தியாகம் செய்வதல்ல. எனவே வளர்ந்து விட்டதால் அவற்றை இழந்து விட்டதாய் நியாயம் கற்பித்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் ஆகும். வளர வளர இழக்க வேண்டியது நம் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் தானே ஒழிய ரசனைகளை அல்ல.

மனோதத்துவ மேதை ஆல்ஃப்ரட் ஆட்லர் (Alfred Adler) அவர்களிடம் ஒரு பேட்டியாளர் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் மிகவும் சந்தோஷமான மனிதராக யாரை எண்ணுகிறீர்கள்?”

ஆட்லர் அவர்கள் சுற்றுலாத் தளமான ஒரு மலைமுகட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரைச் சொன்னார். அந்தப் பணியாளர் தினமும் அதிகாலை அந்த மலையேறி மேலே சென்று மாலை கடைசி சுற்றுலாப் பயணியும் கீழே இறங்கிய பின் தான் கீழே வர வேண்டும். மலை முகட்டில் ஒரு சிறிய கேபினில் கெட்டில் வைத்து தேவைப்படுகிறவர்களுக்கு தேனீர் தயாரித்துத் தரும் பணி அவருடையது.

ஆட்லர் அங்கு சென்றிருந்த சமயம் பயணி ஒருவர் மிகவும் குளிர் அதிகமாக உள்ளதென்று சொல்லி அந்த கேபினிற்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். அந்தப் பணியாளர் அவரிடம் சொன்னார். “ஐயா இந்த மாலை நேர சூரிய கிரணங்கள் அந்த மேகங்களினூடே தெரிகிற அழகே தனி. கதவை சாத்தி விட்டால் அதை நீங்கள் கண்டு ரசிக்க முடியாமல் போய் விடும்.  நான் எப்போதும் அந்தக் காட்சியைத் தவற விடுவதே இல்லை”

ஆட்லர் அந்த பேட்டியாளரிடம் சொன்னார். “அந்த கடுங்குளிரையும் மீறி தினமும் காண்கிற அந்தக் காட்சியை தவற விடாமல் ரசிக்கும் அந்த பணியாளர் தான் மிகவும் சந்தோஷமான ஆள் என்று நினைக்கிறேன். அவர் வாங்கும் ஊதியம் குறைவாகவே இருக்கலாம், அந்த வேலை அடுத்தவர் பார்வைக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சலிக்காமல் தினமும் ரசிக்க முடிகிற அவர் தான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான மனிதர் என்று நினைக்கிறேன்”.

தினசரி வாழ்க்கையில் காணக் கிடைக்கிற அழகுகளை ரசிக்க மறந்து விடுவது உண்மையான எந்திரத்தனம். கிட்டத்தட்ட எந்திரங்களாய் மாறி விடுகிற போக்கு தான் வளர்ச்சி என்றால் நாம் வளராமலேயே இருப்பதே சிறந்தது. ஒரு அழகான கதையை, நெஞ்சை அள்ளும் கவிதையை, இனிமையான இசையை, குழந்தையின் மழலையை, இயற்கையின் அழகை ரசிக்க நேரமும் மனமும் இல்லாமல் ஓட்டும் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது? சதா சர்வ காலம் அதையே ரசித்துக் கொண்டிருப்பது போதுமானது என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கையில் அனைத்திற்கும் அவற்றிற்குரிய கவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. ரசனை நம் வயிற்றை நிரப்பி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் வயிற்றை நிரப்புவதிலும் பொருள் சேர்ப்பதிலும் மட்டுமே வாழ்க்கை நிறைவு பெற்று விடுவதில்லை.

ஒருவர் ரசனை இன்னொருவருக்கு இருப்பதில்லை. இசையை ரசிக்கும் ஒருவர் அந்த அளவுக்குக் கவிதையை ரசிக்காமல் போகலாம். வர்ட்ஸ்வர்த்தை சிலிர்க்க வைத்த வானவில் அழகு இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம். ஆனால் அந்த நபர் ஒரு குழந்தையின் மழலையையும், குறும்பையும் ரசிக்க முடிந்தவராக இருக்கலாம். இப்படி ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ரசனைகளே இல்லாமல் இருப்பவர்கள் குறைவு. இருக்கும் ரசிக்கும் திறனையும் இன்றைய எந்திர வாழ்வில் சிறிது சிறிதாக இழந்து விடுவது மனிதன் தன்னில் ஒரு பகுதியை மரணிக்க வைத்து விடுவது போலத் தான். அதை அனுமதித்து விடாதீர்கள்!!

நன்றி..............
http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html

ஏழே நாட்களில் உங்கள் எடையை குறைக்க...

  உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள்.
நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்.
உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.
நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.
எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.
அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.
1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.
3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.
6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.
7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.
3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.
5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.
அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.