Thursday, January 12, 2012

ஐம்பது வயதைக் கடந்த வெற்றியாளர்

கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்னர் தந்தை தந்த ரூ. 5000/- முதலீட்டில் ஒரு வணிக வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னராகவும்,  வாசு யார்ன் மில்ஸ் இந்திய பிரைவேட் லிமிடெட், வாசு பிரிக் இண்டஸ்ட்ரீஸ், வாசு பேலஸ், வாசு பவுல்ட்ரி பார்ம்ஸ், வாசு லே அவுட், வி.பி. ராயல் ரெஸ்டாரெண்ட் என்கிற நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகவும் திகழ்கின்றவர் திரு. கே.எஸ். வாசுதேவன்.
ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. சுவாலஜி பட்டப்படிப்பை படிக்கச் சென்ற பொழுது இளமைக்கே உரிய குறும்புத்தனமும், துடுக்குத்தனமும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப முதல் இரண்டாண்டுகள் மனம்போனபடி கல்லூரி வாழ்க்கை வாழ்ந்ததால் பல பேப்பர்களின் அரியர்ஸ், மூன்றாமாண்டு படிக்கும் போது இந்த ஆண்டோடு கல்லூரி வாழ்க்கை முடியப் போகிறது. தோல்வி முகத்தோடு எப்படி தந்தையையும், மற்ற உறவினர்களையும் நண்பர்களையும் பார்ப்பது அது நமக்கு அவமானமல்லவா என்கிற உந்துதலினால் தன்னுடைய எல்லா குறும்புகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு முனைப்பாய் வைராக்கியத்தோடு அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று வெளியேறியவர் தான் திரு. வாசுதேவன்.
இந்த மன உறுதிக்கு உறுதுணையாய் இருந்தது அவரது பள்ளி வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தன்னுடைய குறும்புத்தனத்தாலும் துடுக்காலும் விளைவுகளை எண்ணிப் பாராமல் ஒரு ஏப்ரல் முதல்நாள் முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் விதமாக வகுப்பாசிரியர் அமரும் நாற்காலியில் எழுதும் பேனா மையைக் கொட்டி ஆசிரியரின் வேட்டியில் கறையை உண்டு பண்ணியதால் ஆசிரியருக்கு அவர்மேல் அளவற்ற கோபம். இதனால் பத்தாம் வகுப்பில் தோல்வியடைய நேரிட்டது.
ஒன்பதாம் வகுப்பில் இருந்த சிறிய மாணவர்களுக்கு இணையாய் இரண்டாம் ஆண்டும் வகுப்பில உட்காரவே பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு பின்னால் இருந்தவர்களோடு இந்த ஆண்டு கூட அமர்ந்து அவர்களும் இவரை வாடா போடா என்று சஜகமாக அழைப்பதும் தன்னோடு பத்தாம் வகுப்பில் படித்தவர்கள் பதினொன்றாம் வகுப்பு சென்று விட்டதையும் தினமும் பள்ளியில் படிக்கிறபோது மனதிலே உளைச்சல், ஒவ்வொரு நாளும் உள்ளம் உரமேறியது. வாழ்க்கையில் தோல்வி என்ற துரதிர்ஷ்டம் ஒரு போதும் உண்டாகக்கூடாது என்கிற தீர்மானம் தான் பத்தாம் வகுப்பு தோல்வி தான் அவருள் ஒரு பெரிய மனமாற்றத்தை வாழ்க்கையின் மாற்றத்திற்கு அடிகோலியிருக்கிறது.
அவர் தன்னுடைய அறையின் தன் இருக்கைக்குப் பின்னால் ஒரு வாசகத்தைப் பொரித்து வைத்திருக்கிறார்.
அது Ther are only Two things in business. Results and Reasons.
                                                                       Reasons don’t count.
உண்மைதானே வணிகத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணங்களும் விளைவுகளும் தான் முக்கியம். ஆனால் விளைவுகள் மட்டுமே நம்மை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். வணிக வெற்றிக்கு நாம் எடுக்கும் தீர்மானங்களின் விளைவுகளே முக்கியம். காரணங்களல்ல. எல்லோரும் இதயத்தில் நிறுத்த வேண்டிய செய்தியல்லவா.
வாழ்க்கையில் வணிகத்தில் வெற்றிபெற பொய் சொல்லக்கூடாது. ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாயிருப்பது, பிறன் பொருள் விழையாமை, கோபத்தைக் கொள்ளாமல் அன்பினால் மற்றவர்களின் இதயத்தில் இடம்பிடிப்பது, வணிகத்தில் தொடர்ந்து ஏதாவது புதுமைகள் (Innovative) செய்வது, கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்வது அல்லது கடன் வாங்கினால் நாணயமாக காலத்தில் திருப்பிச் செலுத்துவது, எண்ணித் துணிவது, துணிந்தபின் எண்ணுவம் என்பது இல்லாமல் இருப்பது, திட்டமிடுவது, கடுமையாக உழைப்பது, எதுவுமே இங்கே சும்மா இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். என்பதும் மற்றவர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் தீங்கு செய்ய முனையாமை, தன்னுடைய பணியாளர்களைத் தன்னுடைய சொத்தாக நினைக்கும் மனப்பாங்கு, அவ்வப்பொழுது தன் ஊழியர்களுக்கு சிறப்பான செயல்பாடுகளுக்காக பயிற்சியளிக்கப் பேசி அவர்களுக்கு தன்முனைப்பை ஊட்டுதல் போன்றவையே. திரு. வாசுதேவன் அவர்களின் வணிக வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணங்கள் என்பதை கண்கூடாக பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது.
ஒரு மனிதரின் வெற்றிக்கு அவர் நான்கு I களை முக்கியமாக குறிப்பிடுகிறார். ஒன்று I என்கிறதுதான் தொழில் துவங்குகிற அந்த மனிதர் – மனிதரின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், நண்பர்கள் மனோபாவம் என்பன.
இரண்டாவது I என்பது Imagination தொழிலைச் செய்கிறவரின் கற்பனைத்திறன் அல்லது ஆற்றல் புதுமையாய் செய்தல், எண்ணியதை அடைந்து விட்டதாகவும் அனுபவிப்பதாகவும், இப்படிச் செய்தால் என்ன எதிர்கால விளைவுகள் என்பதையும் கற்பனை காட்சிகளாகப் பார்த்து தீர்மானம் செய்யும் திறமை.
மூன்றாவது I என்பது Involvement என்கிற முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற, கரைந்து போகிற, அர்பணித்துக் கொள்கிற தன்மை. எது நேர்ந்தாலும் விட்டு விலகாத மன உறுதி.
நான்காவது I என்பது Implement என்கிற செயலபடுத்தும் தன்மை. திட்டமிட்டதை செயல்படுத்தினால் தான் வெற்றி. செயல் இல்லாமல் விளைவு இல்லை என்கிற உண்மையை உணர்ந்து செயல்படுதல்.

I, Image, Involve and Implement என்பது தான் என்னுடைய நம்பிக்கை, இப்படி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பவர் திரு. வாசுதேவன்.
தன்னுடைய தந்தையைப்பற்றி நினைவு கூறும்பொழுது அவருடைய மன உறுதியையும் மனிதாபிமானத்துடன் அதேசமயம் கண்டிப்பாகவும் இருக்கும் குணத்தை பாராட்டுவதாகச் சொல்கிறார்.
1957-ம் ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பை முடித்த உடனேயே 1976ம் ஆண்டில் தன்னுடைய 20ம் வயதில் தந்தையாரின் கட்டளைப்படி திருமணத்தை செய்து கொண்டார் வாசுதேவன். தன் தந்தை யாரோடு எப்போதும் நட்பு முறையில் பேசுவதும் பழகுவதும் வழக்கம். தன் தந்தையாரைப் பார்த்து ஐயா எனக்கு ஏன் இவ்வளவு சிறிய வயதில் திருமணத்தை முடித்து விட்டீர்கள் சற்றுப் பொறுத்து செய்திருக்கலாமே என்றதற்கு அவர் சொன்ன ஒரே பதில் பொதி சுமக்கிறமாடு துள்ளாது என்று உனக்குத் தெரியாதா? என்று சொன்னாராம். ஆமாம் கால்கட்டு என்று திருமணத்தை வேடிக்கையாக அழைப்பதும் கூட ஒரு ஆண்மகனுக்கு கட்டுப்பாட்டையும், பொறுப்புணர்ச்சியையும் உண்டு பண்ணுவதற்கு இதைவிட சிறந்த வழி இல்லை போலும்.
1975ல் கல்லூரி பட்டப்படிப்பை முடித்த உடன் தொழில் அல்லது ஏதாவது செய்ய வேண்டுமென்று தந்தையிடம் கேட்டபோது ரூ. 5000/- த்தை முதலீடாக ஒரு வாடகை சைக்கிள் நிலையத்தை கோபி கச்சேரி மேட்டில் தொடங்குவதற்காக தந்துவிட்டு தந்தை சொன்னாராம்.
“இதோபார் உன்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு 2000 ரூபாய் தந்தேன். முதல் அண்ணனுக்கு 800 ரூபாய் தந்தேன். உனக்கு 5000 ரூயாய் தந்திருக்கிறேன். இதை வைத்து நீ நன்றாக வளர்ச்சியடைய வேண்டும். பணம் வேண்டும் என்று என்னிடமும் நீ வரக்கூடாது. எனக்கு உதவி வேண்டும் என்று உன்னிடமும் நான் வரமாட்டேன். திறமையாகப் பிழைத்துக் கொள் என்று சொன்னாராம்.
ஒன்று பத்தாவதும் பத்து நூறாவதும் தானே வணிகத்தின் வளர்ச்சி; அதுதானே திறமை. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து யாரையும் ஏமாற்றாமல் எல்லோருக்கும் உதவி செய்து வணிகம் செய்கிறபோது வளர்ச்சிதானே உண்டாகும்.
முன்னேற்றச் சிந்தனைகளை மூளையில் விதைத்து முனைப்போடு உழைத்துக் கொண்டேயிருந்தால் மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய நேரம் எங்கே இருக்கிறது.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிற புறநானூற்றுச் சிந்தனையை சிந்தனையில் பதித்து வைத்திருப்பவர்தான் வாசுதேவன்.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து கடனை முறையாக திருப்பிச் செலுத்தி வளர்ச்சியடைய வேண்டும் என்கிற வாசுதேவன் 1984ல் பிரிக் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கி சேம்பர் செங்கற்களை முதன் முதலாக கோபிச் செட்டிபாளையம் பகுதியில் தொடங்கியபோது வங்கியில் வாங்கிய கடனைமுறையாக கட்டி நல்ல பெயரை வாங்கியதால் தான் பின்னர் ஊத்துக்குளி பேங்க் ஆப் பரோடாவில் மூன்று இலட்சங்களுக்கும் மேல் கடன் வாங்கி பவுல்ட்ரி பார்மை தன் மைத்துனரோடு தொடங்கியிருக்கிறார்.
முப்பதாயிரம் கோழிகளை வைத்து முட்டைக்கோழிப் பண்ணை வெற்றிகரமாக ஊத்துக்குளி பகுதியில் நடைபெற்றதாலும் சுமார் 54,000 கோழிகளைக் கொண்ட கோழிப்பண்ணையும் கோபிச் செட்டி பாளையத்தில் நடத்தி வருகிறார்.
கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் வாடகை சைக்கிள் கடையை தொடங்கினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்! வளர்ச்சியடைய வேண்டும் என்கிற எண்ணத்தினால் நியூ இண்டிய அஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரனசு ஏஜென்ட்டாக கடுமையாக உழைத்து 1977ல் ஒரு டெவலபமெண்ட் ஆபிசராக உயர்வு அடைய முடிந்தது. 1986-ல் அதே நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்று தாராபுரம், ஈரோடு முதிலிய நகரங்களில் விருப்ப ஓய்வு பெற்று வணிகத்தில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
எந்தக் காரணத்திற்காகவும் பொய் சொல்லக்கூடாது. மெய் போன்ற பொய் தோற்றத்தைக் கூட உண்டு பண்ணி மற்றவர்களை மயக்கத்திற்குள்ளாக்க எப்போதும் திரு. வாசுதேவன் முயன்றதே இல்லை. 1987ல் தன் மைத்துனருக்காக கிளை மேலாளராக பணிபுரிந்து கொண்டு இருந்த பொழுது டெவலப் மெண்ட் ஆபிசர் பணிக்காக மைத்துனர் விண்ணப்பித்த போதும் கூட தன் உறவினர் என்பதை குறிப்பிடச் சொல்லி வற்புறுத்தி விண்ணப்பிக்கச் செய்தவர். அந்த காரணத்துக்காகவே அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொழுது அதற்கு பரிகாரமாக கோழிப்பண்ணையை முதன் முதலாக தொடங்கிய பொழுது பங்குதாரராக சேர்த்து அவருக்கு தொழில் தொடங்க வாழ்க்கை வளம்பெற வகை செய்திருக்கிறார்.
1986ல் தாராபுரம் நகரில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த பொழுது அந்த விடுதி சரியாக பராமரிக்கப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை தரப்படாமல் இருப்பதைப் பார்த்து அந்த விடுதி உரிரையாளரை சந்தித்து அந்த விடுதியின் மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் தந்து அது வளர்வதற்கு உதவியாயிருந்தார்.
இதனால் அந்த விடுதி உரிமையாளரும் அவரும் நண்பர்களாக மாறினர். இந்த அனுபவம் தன்னுடைய வாழ்க்கையினலும் ஒரு தலை சிறந்த விடுதியை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டு பண்ணியது. கோபிச் செட்டிபாளையத்தில் வாசு பேலஸ் என்கிற ஒரு அழகான விடுதியை நடத்தி வருகிறார்.
வாடிக்கையாளர்களின் ஆலோசனைகளை கேட்டு மாற்றங்களை உருவாக்கி மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். ஒரு முறை வந்த தங்கியவர்கள் மறுமுறை வேறிடம் செல்லாமல் தக்க வைத்துக் கொள்கிற சேவை வசதிகள் இவரது தனித்தன்மை வணிக வெற்றிக்கு காரணங்கள்.
தந்தை தனது மரணத்திற்குப் பின்னர் கணிசமான சொத்தை விட்டுச் சென்றாலும் மரணத்திற்குப் பின்னரே அந்தச் சொத்துக்களின் உரிமை இவர்களுக்கு கிடைத்து. வணிக வளர்ச்சி முற்றிலும் இவரின் சொந்த முயற்சியே.
சேவை, தரம் முதலியவற்றின் மூலம் எந்தக் கால சூழலிலும் வெற்றி பெற முடியும் என்று திடமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் திரு வாசுதேவன்.
தன்னுடைய பணியாளர்களை தன் சொத்தாக மதிக்கும் இவர் அரசு பணியாளர்கள் சம்பளம் பெறுவது போல் மிகச் சரியாக குறித்த தேதியில் சம்பளம் தந்துவிடுகிறார்.
உழைத்தவனுக்கு வியர்வை காயும் முன்னரே கூலியைக் கொடுத்து விடு என்பது இவரைப் பொருத்தமட்டில் வார்த்தை அல்ல வாழ்க்கை.
தன்னுடைய ஒரு மகள் மருத்துவராக அமெரிக்காவிலும் ஒரு மகள் கோபிக்கு அருகிலும் மனையோடும் மருமகளோடும் பெயரன் பெயர்த்திகளோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் கே.எஸ். வாசுதேவன்.
 ஐம்பது வயதைக் கடந்திருந்தும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக அப்போதைக்கப்போதே முடிவு எடுத்து வெற்றியாளராகத் திகழும் அவரை வாழ்த்துவோம்! விடாமுயற்சியினை மேற்கொண்டு வெற்றியாளர்களாகத் திகழ்வோம்!

No comments:

Post a Comment