Wednesday, March 14, 2012

தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எதையும் சாதிக்கலாம் வாங்க

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், எடுத்த காரியத்தில் முழு ஈடுபாடும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இதற்கு என் வாழ்க்கையில் நடந்த உதாரணங்களையே சொல்ல போகிறேன். நாம் எந்த விஷயத்தையும், படிப்பினையும் தேடி எங்கும் போக வேண்டாம். எல்லாம் நம் வாழ்க்கையிலேயே, நம் அனுபவத்திலேயே கிடைக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு சின்ன கிராமத்திலும், பின்பு எட்டாம் வகுப்பு வகுப்பு வரை அரசாங்க பள்ளிக்கூடத்திலும் தமிழ் மீடியத்திலும் படித்தேன். பின்பு என் தந்தையார் என்னை திருச்சி பிஷப்ஹீபர் தெப்பக்குளம் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்துவிட்டார். ஒன்பதாவது வகுப்பு ஒரு பள்ளிக்கூடத்தில் சேருவது என்பது மிகவும் கடினம். திடீரன சேர்க்கமாட்டார்கள். அப்போது வாளாடியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் மூலம் எனக்கு இடம் கிடைத்தது.
ஆங்கில மீடியம்.

பள்ளி போன ஒரே வாரத்தில் அப்பாவிடம் சொன்னேன்,

"அப்பா, நான் லால்குடியிலேயே படிக்கிறேனே?''

"ஏண்டா" என்றார்.

ஏன் அப்படி சொன்னேன், என் வகுப்பு முழுவதும் கேம்பியன், வெஸ்ட்ரி பள்ளி மாணவர்கள். எல்லோரும் ஆங்கிலத்தை தவிர எதுவும் பேசுவதில்லை. எனக்கு ஒன்றுமே புரியாது. அழுகை அழுகையாக வரும். யாரும் என்னிடம் பேச மாட்டார்கள், "காதல் கொண்டேன்" படத்தில் தனுஷ் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாரில்லையா, அது போல் ஒரு மூலையில் உட்கார்ந்து இருப்பேன்.

அப்போது அப்பா கூறிய அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,

" எல்லோரும் உன்ன திரும்பி பார்க்கணும்னா, உன் படிப்பால், உன் அறிவால், அவர்களின் கவனத்தை உன் பக்கம் திருப்பு.
என்னைக்குமே நாம மட்டம் அப்படினு நினைக்காதே, நம்மால எல்லாம் முடியும்னு நம்பு. முதல்ல நீ நம்பு, உன்னால முடியும்னு, அப்பதான் உன்னால் மற்றவர்களை நம்ப வைக்க முடியும்""

அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, புரியுதோ புரியலையோ மிக கவனமாக படிக்க ஆரம்பித்தேன். ஆண்டவன் எனக்கு ஆங்கில அறிவை அப்போது கொடுக்கவில்லை என்றாலும், நல்ல ஞாபக சக்தியை கொடுத்தான். முதல் மிட் டேர்ம் தேர்வு மார்க் வந்தது, 60 மாணவர்கள் உள்ள வகுப்பில் ஐந்தாவது ரேங்க். எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வைத்தேன்.

எதனால், இது சாத்தியமானது? என்னால் முடியும் என்ற நம்பிக்கையை என் அப்பா கொடுத்தது, அதை நான் நம்பி செயல்பட்டது.

இரண்டாவது உதாரணத்திற்கு வருகிறேன்.

என்னை யாரும் மட்டபடுத்த முயற்சித்தால், நான் பெரும்பாலும் அதை அனுமதிப்பதில்லை.

எனக்கு ஓரளவு பாடத்தெரியும். நாங்கள் ட்ரெயினில் போகும்போது பாடுவது வழக்கம். ஒரு நாள் நண்பன் ஒருவன் உன்னால் ட்ரெயினில் மட்டும்தான் பாட முடியும், வேறு எங்கும் பாட முடியாது எனக்கூறினான். அதையே ஒரு வைராக்கியமாக எடுத்துக்கொண்டு, அனைத்து பள்ளிகள் போட்டியில் பாடி ஆறுதல் பரிசு வாங்கியதையும், காலேஜ் போட்டியில் கலந்து கொண்டதையும் மறக்க முடியவில்லை. காலேஜில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை, ஆனால், அவன் பார்க்கும்முன்னே, அவன் முன்னே ஸ்டேஜில் பாடியது மன ஆறுதலை கொடுத்தது.

இன்னொறு நண்பன் கேட்டான், நீதான், பத்திரிக்கைக்கு எல்லாம் எழுதுகிறாயே உன்னால், நமது காலேஜ் கதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்க முடியுமா? உடனே ஒத்துக்கொண்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால்தான் தலைப்பு கொடுப்பார்கள். நாற்பது நிமிடம் கொடுத்தார்கள். ஒரு வெறி. எழுதினேன். இரண்டாவது பரிசு கிடைத்தது.

நான் வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் அப்பாவிற்கு போன் பண்ணினேன், அப்பா, எனக்கு வேலை பிடிக்கவில்லை. நான் வந்துரட்டுமா?

"ஏற்கனவே ரெண்டு வேலையை இப்படித்தான் விட்டாய், ஏன்" என்றார்.

" இல்லப்பா, இங்க எல்லோரும் 40-45 வயசு ஆளா இருக்காங்க, ரொம்ப அனுபவசாலியா இருக்காங்க, நான் சொல்றதெல்லாம் கேட்கமாட்டாங்க, நான் தான் ரொம்ப சின்ன வயசு, அதனால புடிக்கல"

அப்பா சொன்னார்," அடுத்த கம்பனியிலும் அது மாதிரி இருந்தா என்ன பண்ணுவ? அதையும் வேணானு விடுவியா? நல்லா வேலைய கத்துக்க, இந்த பையன் கிட்டயும் ஏதோ விஷ்யமிருக்குனு எல்லோருக்கும் புரியவை, அது வரை வீட்டு பக்கம் வராத"

தினமும் அழுதேன், அப்பா சொன்னதை நினைத்து பார்த்தேன். என் MD எனக்கு முழு சுதந்திரம் குடுத்தார். எண்ணி மூன்றே மாதம், என்னை எல்லோருக்கும் புரிய வைத்தேன்.ஜெயித்தேன்.

நான் உடல் நல விஷயத்தில் நிறைய ஆர்வம் உள்ளவன். நான் அதிகாலை எழுந்து வாக்கிங் செல்பவன், பிறகு யோகா செய்பவன்.

ஒரு நண்பர் கேட்டார்,

"அதிகாலையில ராக்கோழிபோல இதெல்லாம் தேவையா?"
இன்னொறுத்தர்,

" நீங்க போறதுக்கு பேர்லாம் வாக்கிங்கா"?

" ஜிம் போறேங்கரே, உடம்ப பார்த்தா அப்படி தெரியலையே?"

சில பேருக்கு பதில் சொல்வேன், சில பேருக்கு பதில் சொல்ல மாட்டேன். கேள்வி கேட்கும் பாதி பேர் நம்மால் முடியவில்லையே என பொறாமையால் கேட்பார்கள், நாம் மனம் தளரக்கூடாது? எடுத்த காரியத்தில் கண்ணாக செயல்பட வேண்டும். கேள்விகேட்கும் நபர்களில் முக்கால்வாசிப்பேர் மாததிற்கு இரண்டு முறை ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள். நான் அப்படியில்லை, தலை வலி, காச்சலுக்குகூட ஆஸ்பத்திரிக்கு செல்வதில்லை.

நான் சொல்ல நினைத்து அவர்களுக்கு சொல்லாமல் இருப்பது இதான்,

" ஒன்னுமே செய்யாம, ஏழு மணி வரை தூங்கறதுக்கு, தப்போ, சரியோ ஏதவது ஒண்ணு செய்யரது எவ்வளவோ மேல்"

உலகத்துல சில பேர்தான், எங்க MD மாதிரி நாம முன்னேர உற்சாகப்படுத்துவாங்க, பல பேர் நம்ம ரொம்ப கேவலப்படுத்துரா மாதிரிதான் நடந்துப்பாங்க. நாம அதுக்கெல்லாம் கவலை படக்கூடாது. நாம, நாம எடுத்த முயற்சில முழு ஈடுபாடோட இருந்தோம்னா எல்லாமே வெற்றிதான். நான் அப்படித்தான். யாராவது என்னால ஏதாவது செய்ய முடியாது அப்படினு சொன்னாங்கன்னா, உடனே அதை செஞ்சு பார்க்கனும்னு நினைப்பேன்.

நீ என்ன பெரிசா சாதிச்சிட்ட, இத சொல்ல வந்துட்டனு கேக்கலாம்? ஆனா நான் பெருசா எதுவும் சாதிக்கில, ஆனா ரொம்ப வாழ்க்கையோட கீழ் நிலையிலும் இல்ல, இத எழுதுர அளவுக்கு முன்ன்னேறி இருக்கேன்ல. அதுவே ஒரு சாதனைதானே.

என்னை கேலி செய்தவர்கள் எல்லாம்,எங்கே இருக்கிறார்கள்? தேடி பார்க்கிறேன், காணவில்லை. முன்னேறி இருந்தால்தானே முகவரி தெரிவதற்கு?

ஆனாலும், அவர்களுக்கெல்லாம் என் நன்றி. ஏனென்றால், அவர்களால் தானே என்னால் முன்னறேவும், இவ்வளவு அனுபவங்களியும் பெற முடிந்தது.

என் நண்பன் கேட்டான், இந்த மாதிரி ப்ளாக் எழுதரதால, என்னத்த சாதிக்க போற?

நான் என்ன சாதிக்கிறேன்கறது முக்கியமில்லை. நம்ம எழுத்து, அனுபவங்கள், யாராவது ஒருத்தருக்கு, பயன் பட்டுச்சுனா, அதுவே ஒரு சாதனைதானே?

நன்றி என். உலகநாதன்   http://www.blogger.com/profile/05795133531273711231

No comments:

Post a Comment