Tuesday, March 20, 2012

'போல் வால்ட்’சாம்பியனாக அவர் மாறியா

ஆடு மேய்க்கும் சிறுவன் ‘போல் வால்ட்’ போட்டியில் முதலிடம்-20-10-2008

எழுத்தின் அளவு :
அவிநாசி: பள்ளியில் படித்துக்கொண்டே வறுமையின் காரணமாக, ஆடு மேய்க்கும் சிறுவன், ‘போல் வால்ட்டில்’ மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான்.
அவிநாசி, அரசு மேல்நிலைப் பள்ளியில், திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான கூட்டு குறுமைய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. ஆண்களுக்கான போட்டிகளில், ‘போல் வால்ட்’ சீனியர் பிரிவில், காட்டம்பட்டி டி.எஸ்.ஏ., அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் பழனிசாமி, முதலிடம் பெற்றான்.

முறையான பயிற்சி எதுவுமில்லாமல், 2.60 மீட்டர் உயரத்தை எளிதாகத் தாண்டி முதலிடம் பெற்ற பழனிசாமியின் வாழ்க்கை வறுமை நிறைந்தது. இவரது தந்தை மோகனசுந்தரம், கரும்புச் சோகை உரிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். உடன்பிறந்த இரு அண்ணனும், தம்பி மற்றும் அக்காவும் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

வறுமை காரணமாக, குடும்பத்தில் உள்ள யாருமே ஆறாம் வகுப்பைத் தாண்டாத நிலையில், பழனிசாமி மட்டும் தற்போது, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி நேரம் போக, அருகிலுள்ளவர்களின் ஆடுகளை மேய்த்து கூலி பெற்று, குடும்ப பாரத்தையும் பழனிசாமி சுமந்து வருகிறான்.

அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி அருகே கல்லுக்குழிமேடு என்ற கிராமத்தில் கரும்புச் சோகையை கூரையாகக் கொண்ட குடிசையில் வசிக்கும் பழனிசாமி, குடும்ப வறுமையை எப்படியாவது தாண்டி விட வேண்டுமென்ற ஒரே லட்சியத்தில், தற்போது, மாவட்ட அளவில் ‘போல் வால்ட்டில்’ முதலிடம் பெற்று ஒரு படி முன்னேறியுள்ளான்.

தனது லட்சியம், விளையாட்டு பற்றிய கனவு குறித்து, பழனிசாமி கூறியதாவது:
கடந்த ஒரு ஆண்டாக, விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். குறுமைய போட்டிகளில் உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் ஏற்கனவே பங்கேற்றுள்ளேன்.

அவிநாசி  போட்டியில் கம்பின் உயரம் குறைவாக இருந்ததால், என்னால் 2.60 மீட்டருக்கு மேல் தாண்ட முடியவில்லை. என்னுடைய கம்பை பஸ்சில் எடுத்து வர முடியவில்லை. விளையாட்டுத் துறையில் சாதித்து, எனது குடும்பத்தை உயர்த்த வேண்டுமென்பதே லட்சியம்.

உடற்கல்வி ஆசிரியர் துரைசாமி மற்றும் உடன்படிக்கும் மாணவர்கள் தந்த ஊக்கத்தின் காரணமாகவே, நான் வெற்றி பெற்றேன். விளையாட்டுக்குத் தேவைப்படும் முறையான பயிற்சி கிடைத்தால், இன்னும் சாதிப்பேன். இவ்வாறு பழனிசாமி கூறினான்.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment